FOOD SAFETY NEWS-உணவே உலகம்
WE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்
நம்ம சாப்பிடறது உணவா? விஷமா? அதிர்ச்சி தரும் உணவுப் பொருட்கள்!
எல்லாருக்கும் இன்ஸ்டண்ட் மீது தனி அபிப்ராயம் உண்டு. எதுவாக இருந்தாலும் உடனடியாக கிடைத்திட வேண்டும். அதிலும் வியாபரிகளுக்கு இதில் கொஞ்சம் அதிக நாட்டம் உண்டு என்றே சொல்லலாம்.
தனிப்பட்ட லாபத்திற்காக அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கலப்படம் சேர்க்கிறார்கள். சமையலுக்காக, நாம் பயன்படுத்தும் பொருளில் என்னென்ன கலப்படம் செய்கிறார்கள் அதனை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை :
சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க, ஒரு கிளாஸ் நீரில் ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரையை கரைத்திடுங்கள். சுண்ணாம்பு இருந்தால் அது கிளாசின் கீழே போய் படிந்திடும். இல்லையென்றால் முழுமையாக தண்ணீரில் கரைந்திடும்.
பெருங்காயம் :
பெருங்காயத்தில் கோந்து அல்லது மரத்தில் கிடைக்கும் பிசினைக் கலப்படம் செய்கிறார்கள். இதனை கண்டுபிடிக்க, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்துப் பாருங்கள். தண்ணீர் வெள்ளையாக இருந்தால் அதில் கலப்படமில்லை என்று அர்த்தம். பெருங்காயத்தை எரிக்கும் போது மிகுந்த ஒலியுடன் எரிந்தாலும் அது கலப்படமில்லாத பெருங்காயம் என்று அர்த்தம்.
ஏலக்காய் :
ஏலக்காயில் உள்ளேயிருக்கும் அதன் எண்ணெயை நீக்கிவிட்டு டால்கம் பவுடர் சேர்க்கப்படுகிறது. இதனை பரிசோதிக்க மிகவும் எளிது. ஏலக்காயை லேசாக நுணுக்கினாலே அதில் சேர்க்கப்பட்டிருக்கும் டால்கம் பவுடர் கைகளில் ஒட்டிக் கொள்ளும்.
மஞ்சள் தூள் :
மஞ்சள் தூள் மற்றும் பருப்பு வகைகளில் மெட்டானில் என்ற ரசாயனம் சேர்க்கிறார்கள். இது மஞ்சள் நிறத்தை தூக்கி காட்டும். இதனை கண்டுபிடிக்க, ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தில் மஞ்சள் தூளையோ அல்லது பருப்பு வகையையோ போட்டால் கலப்படமாக இருந்தால் அது ஆரஞ்சு நிறத்திற்கு மாறிடும்.
மிளகாய்த் தூள் :
மிளகாய்த்தூளில் மரப்பொடி, செங்கற்பொடி, ரோடமைன் கல்ச்சர் எனப்படி ரசாயனம் அல்லது சிகப்பு கலர்ப்பொடி ஆகியவற்றை கலப்படம் செய்வார்கள். இதனை நீரில் கரைத்தால் மரத்தூள் என்றால் தண்ணீரின் மேலே வந்து மிதக்கும்,
கலர்ப்பொடி என்றால் தண்ணீரின் நிறம் மாறிடும். செங்கற்ப்பொடி சீக்கிரத்திலேயே அடியில் தங்கிடும்.
ஒரு டீஸ்ப்பூன் மிளகாய் பொடியில் ஐந்து எம்.அசிட்டோன் சேர்த்தவுடன் அடர் சிகப்பு நிறமாக மாறினால் அதில் ரோடமைன் கல்ச்சர் என்ற ரசாயனம் கலந்திருக்கிறார்கள் என்று உறுதி செய்யலாம்.
மல்லித்தூள் :
மல்லித்தூளில் குதிரைச்சாணத்தூளை கலக்கிறார்கள். இதனை கண்டுபிடிக்க மல்லித்தூளை தண்ணீரில் கரைத்திடுங்கள். அதில் கலப்படம் இருந்தால் குதிரைச் சாணத்தூள் தண்ணீரில் கரையாமல் மிதக்கும்.
கிராம்பு :
கிராம்பில் அதிலிருக்கும் எண்ணெயை நீக்கிவிட்டிருப்பார்கள். அப்படி நீக்கிவிட்டார்களானால் அதில் சுவை இருக்காது, முழு பலனை தராது. கிராம்பில் அதன் எண்ணெயை நீக்கிவிட்டார்களா இல்லையா என்பதை அதன் வடிவத்தைப் பார்த்தே நீங்கள் கண்டுபிடிக்கலாம். எண்ணெய் நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி வளைந்து நெளிந்திருக்கும்.
சீரகம் :
சீரகத்தில் புல்விதை கலந்திருப்பார்கள், அதன் நிறத்திற்காக நிலக்கரித்தூளைக் கொண்டு வண்ணம் ஏற்றியிருப்பார்கள். இதிலிருக்கும் கலப்படத்தை கண்டுபிடிக்க சிறிதளவு சீரகத்தை கைகளில் கொண்டு தேய்த்துப்பாருங்கள். நிலக்கரி கலந்திருந்தால் அதன் வண்ணம் உங்கள் கைகளில் ஒட்டிக் கொள்ளும்.
நெய் :
நெய்யில் வனஸ்பதி,அல்லது மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்டிருக்கும். இதனை கண்டுபிடிக்க பத்து மில்லி ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்துடன் 10 மில்லி நெய்யை சேர்த்து நன்றாக கலக்குங்கள். பின்னர் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்திடுங்கள். அதில் வனஸ்பதி கலந்திருந்தால் சிவப்பு வண்ணமாக மாறிடும்.
வெல்லம் :
வெல்லத்தில் மெட்டானில் என்கிற ரசாயனம் மஞ்சள் நிறத்திற்காக கலக்கிறார்கள். ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தில் சிறிதளவு வெல்லத்தை போடுங்கள். போட்டவுடன் அது நிறமாறினால் அதில் கலப்படம் இருக்கிறதென்று அர்த்தம்.
ரவை :
ரவையில் அதன் எடையை அதிகரித்து காண்பிக்க இரும்புத்தூள் சேர்க்கப்படும், காந்தத்தை அருகில் கொண்டு சென்றால் கலப்படம் இருந்தால் அதிலிருக்கும் இரும்புத்தூள் காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும் .
பால் :
பாலில் மசித்த உருளைக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கப்படுகிறது. பாலில் ஒரு சொட்டி டிஞ்சர் அயோடின் சேர்த்தால் கலப்படப் பாலாக இருந்தால் அதன் நிறம் மாறிடும்.
பாலில் யூரியா கலக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை சோதிக்க, 5 மிலி பாலில் இரண்டு சொட்டு ப்ரோமோதைல் ப்ளூ என்ற திரவத்தை ஊறவேண்டும். ஊற்றிய பத்துநிமிடத்தில் பால் நீல நிறமாக மாறினால் அதில் கலப்படம் இருப்பது உறுதியாகிடும்.
இதே பாலில் அதிகளவு தண்ணீர் கலந்திருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால் அதையும் நீங்கள் சோதித்து உறுதி செய்யலாம். பேப்பரை செங்குத்தாக பிடித்துக் கொண்டு அதில் ஒரு சொட்டுப் பாலை விடுங்கள்.
பால் சீக்கிரமாக வழிந்துவிடுவதும். அதில் கலப்படம் இல்லையென்றால் பால் வெள்ளை கோடிட்டது போல அடர்த்தியாக தெரிந்திடும்.
சமையல் எண்ணெய் :
சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெயை சேர்த்திருப்பார்கள்.இதனைக் கண்டுபிடிக்க எண்ணெயுடன் ஹைட்ரோ க்ளோரிக் ஆசிட் கலந்து சிறிது நேரம் வைத்திருங்கள். பின்னர் ஃபெர்ரிக் க்ளோரைடுடன் கலந்தால் டார்க் பிரவுன் வண்ணமாக மாறிடும். அப்படி மாறினால் அதில் கலவை இருக்கிறதென்று அர்த்தம்.
குங்குமப்பூ :
குங்குமப்பூவில் நிறம் மாற்றப்பட்ட சோள நார் சேர்க்கப்படும். பொதுவாக குங்குமப்பூ எளிதாக முறிந்திடாது. அதில் கலப்படம் இருந்தால் எளிதாக முறித்திட முடியும்.
ஜவ்வரிசி :
ஜவ்வரிசியில் நிறம் மாற்றப்பட்ட மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்க்கப்படும். சிறிதளவு வாயில் போட்டு மென்று பாருங்கள். கல் இருந்தால் நற நறவென்று இருக்கும். ஜவ்வரிசியை வேக வைத்தால் கலப்படமில்லாத ஜவ்வரிசி மட்டுமே பெரிதாகும்.
தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் சேர்க்கப்படுகிறது, இதனை கண்டுபிடிக்க தேங்காய் எண்ணெயை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்திடுங்கள். எண்ணெய் உறைந்தால் அதில் கலப்படமில்லை என்று அர்த்தம்.பிற எண்ணெய் கலந்திருந்தால் அது உறையாது.
உப்பு :
உப்பில் வெள்ளைக் கல் தூள் மற்றும் சுண்ணாம்பு சேர்க்கிறார்கள். தண்ணீரில் உப்பைக் கரைத்தால் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாக மாறிடும்.
தேன் :
தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்யப்படுகிறது, தேனை ஊற்றி விளக்கு எரியவைத்தால் தூய தேன் என்றால் எரிந்திடும். கலப்படம் இருந்தால் எரியாது.
ஐஸ் க்ரீம் :
ஐஸ் க்ரீமில் வாசிங் பவுடர் கலக்கிறார்கள். அதனை கண்டுபிடிக்க ஐஸ் க்ரீமில் சில துளி எலுமிச்சை சாரு இடுங்கள். அதில் கலப்படம் இருந்தால் சின்ன சின்ன குமிழ்கள் உண்டாகும்.
No comments:
Post a Comment