நுகர்வோர் சட்டம் வலுப்படுத்த முடிவு


தரமற்ற பொருள் தயாரிப்பாளர்களிடம் இருந்து, நுகர்வோரை பாதுகாக்கும் வகையில், கடுமையான, புதிய சட்டத்தை இயற்ற, பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், தரம் குறைந்த பொருட்களை, நுகர்வோருக்கு ஏமாற்றி விற்பது, அத்தனை சுலபமாக இருக்காது.
நம் நாட்டு சந்தைகளில், தரமான பொருட்களை தேடி வாங்குவது எளிதல்ல. தரமான பொருட்கள் அரிதாக கிடைப்பதால், பெரும்பாலும்,தரம் குறைந்த பொருட்களையே, நுகர்வோர் வாங்கி ஏமாறும் சூழல் உள்ளது. தரம் குறைந்த பொருட்களால், நுகர்வோர், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், தரம் குறைந்த பொருட்களை தயாரிப்போரிடம் இருந்து, நுகர்வோரை பாதுகாக்க,கடுமையான சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தரம் குறைந்த பொருளை உற்பத்தி செய்வோர், விற்பவர், விற்பனைக்கு பின்,அப்பொருட்கள் தொடர்பான சேவைகளை செய்பவர் உட்பட, சம்பந்தப்பட்ட அனைவரையும் கடுமையாக தண்டிக்கும் வகையில், சட்டம் உருவாக உள்ளது.

பல்வேறு கடுமையான ஷரத்துகள் சேர்க்கப் பட்ட, நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை, சட்ட அமைச்சகத்தின் கருத்துக்களை கேட்டு பெற்ற பின், கேபினட் செயலகத்துக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான், சமீபத்தில், அனுப்பி உள்ளார். இந்த மசோதா, 2015, ஆகஸ்டில், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது அமலில் உள்ள,நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்,1986ல் அமலுக்கு வந்தது.இந்த மசோதா,
லோக்சபா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு, விரைவில் சட்டமாக உருவெடுக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
ஆயுள் தண்டனை!


தரம் குறைந்த பொருளை உற்பத்தி செய்து வினியோகிப்பது போன்றவற்றால், நுகர்வோருக்கு இறப்பு ஏற்பட்டால், ஏழு ஆண்டுக்கு குறையாமல், ஆயுள் சிறைத்தண்டனை வரை விதிக்க, புதிய, நுகர்வோர் சட்டதிருத்த மசோதா வகை செய்கிறது. இந்த குற்றத்துக்கு, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்க முடியும்.

தரம் குறைந்த பொருளை வாங்கி பயன்படுத்தியதால், மிக மோசமான காயம் ஏற்பட்டால், ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கவும், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், மசோதா வகை செய்கிறது. சாதாரண காயம் ஏற்பட்டால், ஒரு ஆண்டு சிறை, மூன்று லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். காயம் ஏற்படா விட்டாலும், ஆறு மாத சிறை, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, புதிய மசோதாவில் இடம் உள்ளது.

முதல் முறையாக, குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பொருள் தயாரிப்புக்கான, லைசென்ஸ் இரண்டாண்டுக்கு ரத்து செய்யப்படும். இரண்டாம் முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால், லைசென்ஸ் முழுமையாக ரத்தாகும்.தவிர, நுகர்வோர் பிரச்னைகள் தொடர்பாக, மாவட்ட அளவில், தீர்ப்பாயங்கள் அமைக்கவும், புதிய சட்ட திருத்த மசோதா வகை செய்கிறது.
பல்வேறு சிறப்பம்சங்கள்!


நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மசோதாவில், பல்வேறுசிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தரம் குறைந்த பொருளை உற்பத்தி செய்வோர், விற்பனையாளர், விளம்பரதாரர் ஆகியோர், அத்தகைய பொருளால், நுகர்வோருக்கு காயம் அல்லது மரணம் ஏற்பட்டால், கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

தரம் குறைந்த பொருள் உற்பத்தி, அதன் வடிவமைப்பு, அந்த பொருள் அடங்கிய பாட்டில் அல்லது டப்பாவில் ஒட்டப்படும் லேபிளில்இடம்பெறும் வாசகங்களில் தவறான தகவல் இடம்பெறுதல், தரம் குறைந்த பொருள் அடைக்கப்படும் பெட்டிகள், அவற்றை சந்தைப்படுத்துதல் என, அனைத்து மட்டங்களிலும், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் வகையில், மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தரம் குறைந்த பொருளை தயாரிப்பவர், அல்லது தரம் குறைந்த சேவையை அளிப்பவர், தவறான தகவல் அளிக்கும் விளம்பரம் வெளியிடுவோர் ஆகியோருக்கு, இரண்டாண்டு சிறைத்தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஐந்தாண்டு சிறைத் தண்டனையுடன், ரூ.50 லட்சம் அபராதம் விதிக்க, மசோதாவில் ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மாறி வரும், சந்தை களத்தில், இ - காமர்ஸ் எனப்படும்,இணைய வழி வர்த்தகம், அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், மிகவும் பழையதாக கருதப்படும், பழைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், எந்த வகையிலும் பயன் அளிக்காது. நுகர்வோரை முட்டாளாக்கும் வகையிலான விளம்பரங்கள், தற்போதைய சூழலில் அதிகளவில் வெளியாகின்றன. இதை தடுக்க, பலம் வாய்ந்த, கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். நுகர்வோர் கமிஷன்கள் வலிமைப்படுத்தப்பட வேண்டும்.

ஆஷிம் சன்யால்
நுகர்வோர் குரல், அரசு சாரா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி
- நமது சிறப்பு நிருபர் -

Home வாசகர் கருத்து (8)

  • JSS - Nassau,பெர்முடா
    அப்படியே தரமற்ற சேவைகளை வழங்கும் அரசு மற்றும் கார்பொரேஷன் அதிகாரிகளையும் தண்டிக்க சட்டத்தில் வழி செய்ய வேண்டும். இல்லையெனில் மக்கள் கொடுக்கும் வரிகளுக்கு தரமற்ற சேவை தான் கிடைக்கும்
  • balakrishnan - coimbatore,இந்தியா
    தேவையான விஷயம் தான், பெரிய பெரிய கம்பெனி ப்ராண்ட் பெயரில் வருபவைகளுக்கு உரிய உரிமம் இருக்கிறது, ஆனால் சில்லறை வணிகங்களில் ஏராளமான தின்பண்டங்கள், மளிகை பொருட்கள், தூள்கள் அனைத்துமே பெரும்பாலும் கலப்படம் செய்து தான் விற்கப்படுகிறது, சிறுவர்கள் சிறுமிகள் தின்பண்டங்கள் பெரும்பாலும் ஆபத்து நிறைந்தவையாக கருதப்படுகிறது, அதைப்போல கோவை சுற்றுப்புற பகுதிகளில் மட்டமான எண்ணெய் பயன்படுத்தி போண்டா பஜ்ஜி எல்லாம் வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது, இதையெல்லாம் கட்டுப்படுத்த, உயர்ந்த தரமான பொருட்களை விநியோகம் செய்வதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, ஏதாவது ஒரு சட்டம் வேண்டும்
  • rajan - kerala,இந்தியா
    வெளி நாடுகளில் இருந்து குறிப்பாக சீனாவில் இருந்து இயக்குமதியாகும் தரம் இல்லா பொருட்களை இந்த சட்டம் எப்படி தடை போட போகிறது என்பதையும் தெளிவு படுத்துங்கள். அத்தனை இறக்குமதி சாதனங்களும் தர நிருணயம் செய்து மக்கள் உயயோகத்திற்கு வரும்படி பார்த்து கொள்ளுங்கள். நடைபெறும் இந்த தர நிர்ணயத்திலும் ஊழல் பினாமி கொள்முதல்களை எப்படி தடை செய்ய போகிறீர்கள். இதை பண்ணினால் பாதி வெற்றி தானே.
  • Siva Subramaniam - Coimbatore,இந்தியா
    முதலில் இந்த மாதிரியான விளம்பரங்களில் நடிகர்கள் வருவதை நிறுத்த வேண்டும் பல கோடிகள் வாங்கி தகாத பொருள்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் இப்படி பட்ட வர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர சட்டம் கொண்டுவர வேண்டும்.
  • m.viswanathan - chennai,இந்தியா
    அது நம் ஊர் அண்ணாச்சி கடையில் நடக்காதே , வேறு பொருளாக வாங்க சொல்லுவார் பணத்தை திருப்பி கேட்டால் , கடைக்குள் வைத்து நன்கு கவனித்து விடுவார்களே
  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
    இதை எல்லாம் எப்படித் தடுக்கப் போகிறது....??? சிறு சிறு கிராமங்களில் கூட சிறிய அளவிலான ஹோட்டல்கள், மெஸ் போன்றவை நல்ல வியாபாரத்தில் சக்கை போடு போடுகின்றன.... இதே போல பேக்கரிகள்.... சிறு குறுந்தீனி தயாரிப்பாளார்கள்..... இப்படி நீ..........ண்ட பட்டியலே போடலாம்..... இவற்றின் தரத்தை எல்லாம் யார் எப்படி சோதிக்கப் போகிறார்கள்....??? அதற்கான லேப்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனரா....????
  • Mal - Madurai,இந்தியா
    Good move....
  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
    நல்ல விஷயம்தான்... செயல்படுத்தவேண்டும்.. எந்த ஒரு பொருளையும் வாங்கி உபயோகித்து, தரமில்லை என்றால் திரும்ப கொடுத்து பணம் வாங்க வசதி இருக்கவேண்டும்...

Facebook Messenger

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...